

ரபேல் ஊழல்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. இதை மத்திய அரசு மறுத்தும் வந்தது. ரபேல் விமான ஒப்பந்தத்தின்படி, பிரான்சில் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கி விட்டன.இந்த விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டில் புலன் விசாரணை இணையதளம ஒன்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டது. இதையடுத்து அங்கு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், விசாரணைக்கு நீதிபதியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏன் விசாரணைக்குஉத்தரவிடவில்லை?
இதில் மத்திய அரசு மவுனம் காப்பதாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இரு நாட்டு அரசுகளிடையே ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறபோது, அதில் இடைத்தரகரோ, ஊழலோ இருக்க முடியாது. இந்த ஊழலால் பலன் அடைந்துள்ள ஒரு நாடு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்களின் பணத்தை இழந்துள்ள ஒரு நாடு (இந்தியா) ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? தேசிய பாதுகாப்பு குறித்து மோடி தலைமையிலான அரசு நிறைய சத்தம் போடுகிறது. ஆனால் அது முதலாளித்துவ நண்பர்களுக்கு உதவுகிறபோது, நாட்டின் பாதுகாப்பு நலன்களை பலவீனப்படுத்துகிறது.
ஏன் இந்த மவுனம்?
ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரான்ஸ் முடிவு எடுத்து 24 மணி நேரம் கடந்து விட்டது. பொறுப்புள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் எழுப்புகிற கேள்வி ஒன்று உண்டு, அது- இந்திய அரசு ஏன் இன்னும் மவுனமாக இருக்கிறது? பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டும், இந்தியா அமைதியாக இருப்பது நாட்டு மக்களை வெளிப்படையாக அவமதிப்பதாகும். ராணுவ மந்திரி பொறுப்பு கூறல், பரிசீலனை குறித்து ஏன் மவுனம் காக்கிறார்?
நாடாளுமன்ற கூட்டுக்குழு அமையுங்கள்
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். ரபேல் பேரத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆராயப்பட வேண்டும். உண்மையை தெரிந்து கொள்வதற்கு நாட்டு மக்களுக்கு தகுதி இருக்கிறது. இதில் இழப்பு பிரான்சுக்கு அல்ல, இந்தியாவுக்குத்தான் என்பது தெளிவாக இருக்கிறது. பிரான்ஸ் ஏமாற்றப்படவும் இல்லை. கொள்ளையடிக் கப்படவும் இல்லை. மாறாக இந்தியாவில் வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார், கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.