

ஆசா,
மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, வான்வழி தாக்குதல் நடத்தியவர்களுக்கு உங்கள் முதல் வாக்கினை அர்ப்பணித்திடுவீர்களா? என முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடம் அவர் கேட்டு கொண்டார்.
இதன்பின் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது பாகிஸ்தான் கூறும் விசயங்களையே கொண்டுள்ளது என கூறிய பிரதமர் மோடி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் செயல்படுகின்றன என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இதுபோன்ற கட்சிகளுடன் மராட்டியத்தின் வலிமையான மனிதர் கைகோர்க்கிறாரா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான உமர் அப்துல்லா சமீபத்தில், காஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்பட மாநிலத்திற்கு தனி பிரதமர் வேண்டும் என கூறிய நிலையில் பிரதமர் அதனை சுட்டி காட்டி பேசியுள்ளார்.
தொடர்ந்து மோடி பேசும்பொழுது, தீவிரவாதிகளின் குகைக்குள் சென்று தாக்குவது என்பது புதிய இந்தியாவின் கொள்கை. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.