ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் ஏன்? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 3 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி அந்தக் கட்சி, அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.

அந்த வகையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 3 முக்கிய கேள்விகள் எழுப்பி உள்ளது.

3 கேள்விகள்

இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:- இன்று தொடர்ந்து 10-வது நாளாக அதானி நிறுவனங்களின் அற்புதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு குறித்து 3 முக்கிய கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. உங்கள் மவுனத்தைக் கலையுங்கள், பிரதமர், அவர்களே.

* கவுதம் அதானி, 2017-ம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தில் இருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பைக்கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடங்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டு திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?

* அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு 'ஷெல்' நிறுவனங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும், ஆளும் கட்சிக்கும் (பா.ஜ.க.) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?

* நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில் நிறுவனங்கள் ('ஸ்டார்ட்-அப்'கள்) மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com