கேரள முன்னாள் முதல்-மந்திரி ஏ.கே.அந்தோணி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு

கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.அந்தோணி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கேரளாவை சேர்ந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கி வருகிறார். காங்கிரசின் கேரள முகமாகவே அறியப்பட்டு வந்த ஏ.கே.அந்தோணி, ராஜீவ்-சோனியா குடும்பத்துக்கு மிகுந்த நெருக்கமானவர்.

81 வயதாகும் ஏ.கே.அந்தோணி தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

அத்துடன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏ.கே.அந்தோணி அறிவித்து உள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று தொலைபேசியில் அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு வயதாகி விட்டது. எனவே நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்வு பெற விரும்பவில்லை. எனக்கு பதிலாக இளைஞர் ஒருவருக்கு கட்சி வாய்ப்பளிக்க வேண்டும். நான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க விரும்புகிறேன். ஆனால் கேரளாவில் கட்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். இனிமேலும் டெல்லியில் இருக்கமாட்டேன் என தெரிவித்தார்.

சிறு வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஏ.கே.அந்தோணி 1970-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து தனது இளம் வயதிலேயே கேரள முதல்-மந்திரி என்ற பெருமையை 1977-ல் பெற்றார். பின்னர் 1995, 2001-லும் கேரள முதல்-மந்திரி பதவி ஏ.கே.அந்தோணியை தேடி வந்தது.

பின்னர் அவர் தேசிய அரசியலுக்கு சென்றார். கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய அவர், காங்கிரசின் பல்வேறு உயர்மட்ட கமிட்டிகளில் பொறுப்பு வகித்தார்.

1985 முதல் 5 முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.அந்தோணி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மந்திரி சபையில் ராணுவம் மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com