முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி வசூல்.. மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்

காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 138 ஆண்டுகள் நிறைவடைவதால், கட்சியினர் 138ன் மடங்குகளில் நிதி வழங்கும்படி கட்சி தலைமை கூறியிருக்கிறது.
முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி வசூல்.. மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி நிதி வசூலிக்கும் பணியை தொடங்கியிருக்கிறது.

'நாட்டிற்காக நன்கொடை' என்ற பெயரில் நிதி வசூல் செய்யும் இயக்கத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக அவர் ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினார்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போது, 'திலக் ஸ்வராஜ் நிதி' என்ற பெயரில் மக்களிடம் இருந்து மகாத்மா காந்தி திரட்டினார். அதேபோல், நாட்டை காப்பாற்றும் நோக்கத்துடன், நாட்டின் நலனுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த இயக்கத்தை தொடங்கி வைத்து கார்கே பேசியதாவது:-

நாட்டிற்காக காங்கிரஸ் கட்சி முதல் முறையாக மக்களிடம் நன்கொடை கேட்கிறது. சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தியும் மக்களிடம் நன்கொடை பெற்றார்.

பணக்காரர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டே இருந்தால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டியிருக்கும். நமது கட்சியானது தாழ்த்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள், சிறுபான்மையினர் மற்றும் உயர் சாதியினர் என அனைத்து தரப்பினருக்கும் எப்போதும் ஆதரவாக உள்ளது. அவர்களுக்கு உதவ விரும்புகிறோம்.

சாமானியர்களின் உதவியோடு நாட்டை கட்டியெழுப்பவே இந்த முயற்சி. இந்த முயற்சிக்காக கட்சியினர் தாராளமான நிதி வழங்க வேண்டும். மக்களிடமும் நிதி வசூலிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேரடியாகவோ ஆன்லைன் மூலமாகவோ நிதி வழங்கலாம். காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 138 ஆண்டுகள் நிறைவடைவதால், 138ன் மடங்குகளில் நிதியை பெற உள்ளனர். அதாவது, ரூ.138, ரூ. 1,380, ரூ.13,800 என்ற அளவில் வழங்கவேண்டும். கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலக நிர்வாகிகள் தலா ரூ.1,380 வழங்க வேண்டும் என கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினமான டிசம்பர் 28ம் தேதிவரை ஆன்லைன் மூலம் நிதி பெறப்படும். அதன்பின் கட்சியினர் வீடு வீடாக சென்று நிதி வசூல் செய்வார்கள். ஒவ்வொரு பூத்துக்கும் 10 வீடுகளில், குறைந்தபட்சம் ரூ.138 வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com