

புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட 'யுனிட்ரீ கோ2' என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாக கூறி ஏ.ஐ. மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர், ‘இந்த ரோபோ நாய் எங்கள் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது’ என்று பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தியா மட்டுமின்றி, சீனாவை சேர்ந்தவர்கள் பலரும் அந்த ரோபோ நாய் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டது என கருத்து பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“செயற்கை நுண்ணறிவில் மோடி அரசு இந்தியாவை உலக அளவில் கேலிப்பொருளாக்கியுள்ளது. இந்தியாவின் திறமை மற்றும் தரவை பயன்படுத்துவதற்கு பதிலாக ஏ.ஐ. உச்சி மாநாட்டில் சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்கின்றன. இது இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சங்கடம் ஆகும். மோடி அரசாங்கம் இந்தியாவின் பிம்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மிடம் இருக்கும் தரவுகளின் ஆற்றல் மூலம் உலக அளவில் செயற்கை நுண்ணறிவில் நாம் தலைமை தாங்க முடியும். ஆனால் மோடி அரசு செயற்கை நுண்ணறிவை நகைப்பிற்குரியதாக மாற்றிவிட்டது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.