ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்ற விவகாரம்: சட்டசபை கூட்டு குழு விசாரிக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார்

ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெற்ற விவகாரம் குறித்து சட்டசபை கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்ற விவகாரம்: சட்டசபை கூட்டு குழு விசாரிக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார்
Published on

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த...

ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெற்ற விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இருந்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளையும் சேர்த்து விசாரணை நடத்தட்டும். இதற்கு காங்கிரஸ் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் நடந்த ஒப்பந்தங்களை சேர்த்து விசாரணை நடத்தட்டும்.

மக்கள் வரிபணத்தை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. அவ்வாறு மக்கள் வரி பணத்தில் முறைகேடு செய்வது மிகப்பெரிய தவறாகும். அது காங்கிரஸ் ஆகட்டும், பா.ஜனதா ஆகட்டும், ஜனதாதளம் (எஸ்) கட்சியாக இருக்கட்டும், தவறு யார் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

சட்டசபை கூட்டு குழு

இந்த கமிஷன் விவகாரம் குறித்து விசாரிக்க சட்டசபை கூட்டுகுழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழு விசாரணை நடத்த வேண்டும். சட்டசபை கூட்டு குழுவுக்கு பா.ஜனதாவினரே தலைவராக இருக்கட்டும். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ராஜேஷ் சிங் நீர்ப்பாசனத்துறை செயலாளராக இருக்கிறார்.

அவரது தலைமையில் விசாரணை நடைபெற்றால், உண்மை வெளியே வருவதற்கு சாத்தியமா?. அதனால் சட்டசபை கூட்டு குழு முதலில் விசாரணை நடத்தட்டும். அப்போது அரசு ஒப்பந்ததாரர்கள் விவகாரத்தில் யார்-யார் என்ன செய்திருக்கிறார்கள் என்பது வெளியேவரும்.

தொடர் போராட்டம்

ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெற்ற விவகாரத்தை காங்கிரஸ் பார்த்து கொண்டு சும்மா இருக்காது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆட்சியை கலைக்கும்படி கூறி கவர்னரை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு கொடுத்திருக்கிறோம். கவர்னரிடம் புகார் அளித்து விட்டு இந்த விவகாரத்தில் சும்மா இருந்து விட முடியாது. ஒரு ஆட்சியை கலைக்கும்படி கவர்னரிடம் முறையிடும் போது, அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தை கையில் எடுக்க முடியுமா?. 40 சதவீத கமிஷன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.

கர்நாடக மேல்-சபையில் தர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் ரகசிய கூட்டணி அமைத்து தேர்தலை பா.ஜனதாவினர் எதிர் கொள்கிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com