புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், இந்த விவகாரம் தொடர்பாக அமைதி காக்கும்படி பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

காங்கிரஸ் சரமாரி கேள்வி

இந்நிலையில் இதுகுறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை டெல்லியில் காங்கிரஸ் கட்சி நேற்று நடத்தியது. அதில் அக்கட்சியை சேர்ந்த, ஓய்வுபெற்ற கர்னல் ரோகித் சவுத்திரி, ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அனுமா ஆச்சாரியா ஆகியோர் கூறியதாவது:-

'புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், ராணுவ முன்னாள் தலைமை தளபதி சங்கர்ராய் சவுத்திரி வெளியிட்டுள்ள அதே கவலை, பாதுகாப்பு துறையினருக்கும், ஒட்டுமொத்த தேசத்துக்கும் இருக்கிறது.

ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதிக்கும், பிப்ரவரி 13-ந்தேதிக்கும் இடையில் அளிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

ஏன் தாமதம்?

பயங்கரவாதிகளால் 300 கிலோ வெடிபொருட்களை பெறமுடிந்தது எப்படி? தெற்கு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும் இந்த அளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படாதது ஏன்? புல்வாமா தாக்குதல் நடந்த 4 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுகுறித்த விசாரணை எந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது? அந்த விசாரணையை முடிப்பதிலும், அதில் வெளிவரும் தகவல்களை நாட்டுக்கு தெரிவிப்பதிலும் ஏன் தாமதம்?

வெள்ளை அறிக்கை வேண்டும்

இந்த தாக்குதல் எப்படி நடந்தது, இதில் உளவுத்துறை தோல்வி என்ன, ஏன் விமானம் மூலம் செல்ல சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன, இந்த விவகாரத்தில் சி.ஆர்.பி.எப்., உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பங்கு என்ன என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.'

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com