

புதுடெல்லி,
காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.தி.மு.க. இணைந்து குரல் எழுப்பின. வங்கி மோசடி தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ந்தேதி தொடங்கி கடந்த மாதம் 9ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து 2வது கட்ட அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது நாளாக நேற்று மக்களவை கூடியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் எழுந்து வங்கி மோசடிக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியினர் முழக்கமிட்டனர். தெலுங்கானாவில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியினர் வலியுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கட்சி கொடியை உடலில் போர்த்தி, கோரிக்கை அடங்கிய அட்டையை கையில் ஏந்தி நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து கோஷமிட்டனர். மராத்தி மொழிக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்க கோரி சிவசேனா கட்சியினரும் அமளி செய்தனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் அனந்தகுமார், அருண் ஜெட்லி ஆகியோர் சபையில் அமைதி ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
தமிழகம், கர்நாடகா இடையே காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அரசு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து குரல் எழுப்பினர். மேலும் அது தொடர்பான கோரிக்கை அட்டையை கையில் ஏந்தி அவை மைய மண்டபத்தில் கோஷமிட்டனர்.
அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய மந்திரி விஜய் கோயல் ஆகியோர் சமாதானப்படுத்த முயற்சி எடுத்தனர். ஆனால் அது பலன் அளிக்காததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் எந்த அலுவல்களும் நடைபெறாமல் நேற்றும் முடங்கியது.
இத்தாலி சென்றிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்புடையவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.