சர்ச்சைக்கு உள்ளான மல்லிகார்ஜுன கார்கேவின் தீபாவளி வாழ்த்து: பாஜக கடும் தாக்கு

சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலளித்த பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ் கட்சி பாபர் மீது தொடர்ந்து அனுதாபம் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Published on: 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, தீபாவளி பண்டிகை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, "தீபாவளி என்பது மகிழ்ச்சியின் ஈத் போன்றது. நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகையாகும். இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த பண்டிகை மக்களை ஒன்றிணைக்கிறது. உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை சந்திக்க வாய்ப்பளிக்கிறது" என்று கூறினார்.மேலும், நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்பவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கார்கேவுக்கு பா.ஜ.க. கண்டனம்

கார்கேவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், "காங்கிரஸ் தலைவர் தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என்று அழைக்கிறார். தீபாவளி பண்டிகையின்போதுகூட காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலைப் பற்றியே சிந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்துக்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளார்.

சுதான்ஷு திரிவேதி விமர்சனம்

பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி கூறுகையில், காங்கிரஸ் கட்சி பாபர் மீது தொடர்ந்து அனுதாபம் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "அப்போதும் காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் பாபர் இருந்தார். இப்போதும் அவர் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது" என்று விமர்சித்தார். கார்கேவின் தீபாவளி வாழ்த்து மற்றும் சோனியா காந்தியின் பாபர் மசூதி இடிப்பு குறித்த கருத்துகள் என இரு விவகாரங்களையும் முன்வைத்து பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

X