

புதுடெல்லி
தேர்தல் தோல்விக்காக அரசியல் சாசன நிறுவனங்களை காங்கிரஸ் தாக்கி வருகிறது என மத்திய மந்திரி சாடியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டு நோக்கி நேற்று பேரணியும் சென்றனர்.
காங்கிரசின் இந்த போராட்டங்களை பா.ஜ.க. கடுமையாக குறை கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சித்தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தலில் அடைந்து வரும் தோல்விக்காக காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன நிறுவனங்களை கடுமையாக தாக்கி வருகிறது.
ஆனால் அதன் தோல்விகளுக்கு தேர்தல் ஆணையம் காரணமில்லை. மாறாக காங்கிரசின் தேர்தல் பின்னடைவுகளுக்கு அதன் சொந்த தலைமைதான் காரணம். ஏனெனில் அதன் தலைமையிடம் தொலைநோக்கு பார்வை இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை பார்ப்பதற்கே ஒரு சிறப்பு நடைமுறை உள்ளது. ஒரு கடிதம் எழுதிவிட்டு, உங்களுக்குத் தோன்றும் போதெல்லாம் ஆஜராக முடியாது என்றார்.
காங்கிரசின் இந்த போராட்டம் முற்றிலும் ஒரு நாடகம். முழுக்க முழுக்க நாடகத்தன்மையாக உள்ளது. அதனை தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறினார்.
அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி அடைவதும், பின்னர், போராட்டங்களை முன்னெடுத்து செல்வது மற்றும் அரசியல் விசயங்களை தெருவுக்கு கொண்டு வருவது என்பது காங்கிரசின் தலைவிதியாகி விட்டது. உள்கட்சி பூசலும் ஒரு வகையில் காரணம். அக்கட்சியில், பல்வேறு பகுதிகளில், உள்கட்சி தலைமைக்கான மோதல்களும் காணப்படுகின்றன. அதுவே காங்கிரசின் தலைமை. அந்த தலைமைக்கு நாட்டை பற்றியோ, நாட்டு மக்களை பற்றியோ தெரியாது என்றார்.