புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு: மாயாவதி அதிரடி குற்றச்சாட்டு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு. நீண்டகாலமாக ஆட்சி செய்த போதிலும், அக்கட்சி எதுவுமே செய்யவில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு: மாயாவதி அதிரடி குற்றச்சாட்டு
Published on

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பரிதாபகரமான நிலையில் உள்ளனர். உண்மையில், இதற்கு காங்கிரசே பொறுப்பு.

சுதந்திரம் அடைந்த பிறகு, மத்தியிலும், மாநிலங்களிலும் நீண்ட காலமாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது.

அப்போது, தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களிலும், நகரங்களிலும் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடுகள் செய்திருந்தால், அவர்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசும் வீடியோக்கள் வெளிவருகின்றன. ஆனால் அவர்களிடம் அனுதாபம் இருப்பதாக தெரியவில்லை. வெறும் நாடகமாக தெரிகிறது.

தாங்கள் சந்தித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேருக்கு உதவி செய்தனர் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் சொன்னால், நன்றாக இருக்கும்.

மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா அரசுகள், காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்றக்கூடாது. தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அங்கேயே வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவர்கள் சுயசார்புடன், முழு கவுரவத்துடன் வாழ்வதற்கான கொள்கையை வகுக்க வேண்டும். அப்படி செய்தால், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாது.

அதே சமயத்தில், அரசு உதவி கிடைக்காமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பகுஜன் சமாஜ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com