பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவிக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியான பாட்டியாலா தொகுதியின் எம்.பி. பிரனீத் கவுரின் “கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு” விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவிக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கடுமையான அதிகார மோதலுக்கு மத்தியில் அமரீந்தர் சிங் செப்டம்பர் மாதம் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங்கிற்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது குடும்பக் கோட்டையான பாட்டியாலா தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அமரீந்தர் அறிவித்திருந்தார். அவர் 2002, 2007, 2012 மற்றும் 2017 ஆகிய நான்கு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளரான காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் சவுத்ரி அனுப்பி உள்ள கடிதத்தில்,

கடந்த பல நாட்களாக, காங்கிரஸ் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாட்டியாலாவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் நீங்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. உங்கள் கணவர் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கியதிலிருந்து இந்த தகவல்களும் செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. உங்கள் கணவரின் கட்சிக்கு ஆதரவாகப் போவது குறித்து ஊடகங்களில் நீங்கள் வெளியிட்ட அறிவிப்புகள் எங்களுக்கு தெரியவந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com