

திருவனந்தபுரம்
கேரளம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கட்சி மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 10 மணி முதலே திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் இந்திரா பவனுக்கு எம்.எல்.ஏ.க்கள் வர தொடங்கினார்.அவர்களை காங்கிரஸ் முக்கிய பிரமுகர் செரியான் பிலிப் பிரதான வாயிலில் நின்றபடி வரவேற்று கொண்டு இருந்தார்.
அப்போது காங்கிரஸ் சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா வந்தார்.
அவரை பார்த்ததும் வாயிலில் நின்று கொண்டிருந்த செரியான் பிலிப், பெண் எம்.எல்.ஏ.வை பாய்ந்து கட்டி பிடித்து வரவேற்பது போல் முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையை தட்டி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் செரியான் பிலிப் விடாமல் அவரை மீண்டும் கட்டி பிடிக்க முயன்றார்.
இந்த காட்சியை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்தகாட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தநிலையில் செரியான் பிலிப்பின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செரியான பிலிப் பிரதான வாயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்த சம்பவத்தால் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.