குஜராத் சட்டசபையில் டீ-சர்ட் அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வெளியேற்றம்

குஜராத் மாநிலம் சோம்நாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விமல் சுடசாமா. இவர் ஒரு வாரத்துக்கு முன்பு, மாநில சட்டசபைக்கு டீ-சர்ட் அணிந்து வந்தார்.
எம்.எல்.ஏ. விமல் சுடசாமா
எம்.எல்.ஏ. விமல் சுடசாமா
Published on

அப்போது அவரிடம் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, சட்டசபைக்கு டீ-சர்ட் அணிந்துவரக் கூடாது. அடுத்த முறை அவ்வாறு அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.இந்நிலையில், எம்.எல்.ஏ. விமல் சுடசாமா நேற்றும் சட்டசபைக்கு டீ-சர்ட் அணிந்து வந்தார்.அப்போது அவரிடம் தான் முன்பு கூறியதை நினைவூட்டிய சபாநாயகர், டீ-சர்ட்டுக்கு பதிலாக சட்டை அல்லது குர்தா அணிந்து வரும்படி கூறினார்.ஆனால், டீ-சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருவதில் என்ன தவறு? தான் தேர்தல் பிரசாரத்தின்போது கூட டீ-சர்ட்தான் அணிந்திருந்தேன் என சபாநாயகருடன் சுடசாமா வாதிட்டார்.

ஆனால், சட்டசபை ஒன்றும் விளையாட்டு மைதானம் அல்ல. இதற்கு என்று ஒரு நடத்தை ஒழுங்கு உள்ளது. இதன் கண்ணியத்தைக் காக்கும் வகையில் சட்டைதான் அணிந்துவர வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.பின்னர் அவரது உத்தரவின் பேரில், சபைக் காவலர்கள் எம்.எல்.ஏ. சுடசாமாவுடன் சென்று அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.அதன்பின், சபாநாயகருடன் வாதத்தில் ஈடுபட்டதற்காக சுடசாமாவை 3 நாட்கள் சட்டசபையில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை பா.ஜ.க. மந்திரி பிரதீப்சிங் ஜடேஜா கொண்டு வந்தார்.

ஆனால் அந்த தீர்மானத்தை திரும்பப் பெற்ற முதல்-மந்திரி விஜய் ரூபானி, சுடசாமா சரியான ஆடையை அணிந்து வருமாறு அவருக்கு அறிவுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தமானியும், சட்டசபைக்கு குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை, சபாநாயகரின் உத்தரவு, அடிப்படை உரிமை மீறல் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com