காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ.15 கோடிக்கு எடியூரப்பா மகன் பேரம்?

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ.15 கோடிக்கு எடியூரப்பா மகன் பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ.15 கோடிக்கு எடியூரப்பா மகன் பேரம்?
Published on

பெங்களூர்

கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜகவுக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் இல்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களின் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள எல்லாபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போன் செய்து பேரம் பேசியதாக கன்னட டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கணவரை எங்களுக்கு ஆதரவு அளிக்கச் செய்தால் ரூ. 15 கோடி தருகிறோம் என்று விஜயேந்திரா பேரம் பேசியுள்ளாராம். இது குறித்த ஆடியோவை அந்த கன்னட டிவி சேனல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங். எம்.எல்.ஏவின் மனைவிக்கு பாஜக எம்எல்ஏ போன் செய்து எடியூரப்பாவுக்கு வாக்களிக்க சொன்னதாகவும் ரூ.15 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார் என வி.எஸ்.உக்ரப்பா கூறி உள்ளார்.

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ சோமசேகர் பிடியில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டலில் இருப்பதாக தகவல் வெளியானது. புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தாஜ் ஃபிஞ்சு ஹோட்டலுக்கு டிஜிபி தலைமையில் போலீஸ் விரைந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலுடன் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அமைச்சர் பதவி தருவதாக பாட்டீலிடம் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3-வது பேர ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com