விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி, விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகவும், அவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Published on

மலோட்,

சம்பா பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி அறிவித்தது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. விவசாயிகள் வளர்ச்சி பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

அன்பான விவசாய சகோதர சகோதரிகளே, எந்த சூழ்நிலையிலும் எப்போதும் நீங்கள் கடினமாக உழைத்து வருகிறீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உங்கள் வாழ்வு, விரக்தியாகவே இருக்கிறது. பல ஆண்டுகளாக நீங்கள் வெறும் 10 சதவீத லாபத்தையே பெற்று வந்திருக்கிறீர்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால், கடந்த 70 ஆண்டு காலத்தில், பெரும்பாலான நாட்கள் ஆட்சியில் இருந்த கட்சி (காங்கிரஸ்) விவசாயிகளை மதிக்கவில்லை. வெறும் வாக்குறுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி வழங்கி இருக்கிறது. காங்கிரசுக்கு ஏதாவது கவலை இருக்குமென்றால், அது ஒரேயொரு குடும்பத்தின் வசதியை பற்றிய கவலையாகும். கடந்த 70 ஆண்டுகால வரலாறு இதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்த நாட்டின் ஆன்மாவே விவசாயிகள்தான். அவர்கள்தான் நமது அன்னதான பிரபுக்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி எப்போதும் அவர்களுக்கு துரோகமே இழைத்து வருகிறது. பொய்களை கூறி ஏமாற்றி விட்டது. விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது.

விவசாய கழிவுகளை எரிக்கும் விவகாரம் பெருத்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.50 கோடி ஒதுக்கி உள்ளது. இதற்கான எந்திரங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீத உதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com