விலைவாசி உயர்வுக்கு எதிராக களம் இறங்குகிறது காங்கிரஸ்

விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி களம் இறங்குகிறது. 31-ந் தேதி முதல் 3 கட்ட போராட்டம் நடத்துகிறது.
விலைவாசி உயர்வுக்கு எதிராக களம் இறங்குகிறது காங்கிரஸ்
Published on

போராட்ட களத்தில் காங்கிரஸ்

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய அத்யாவசிய எரிபொருட்கள் விலைகள் கடும் உயர்வை சந்தித்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இது ஒரு தொடர்கதை என்கிற ரீதியில் தொடர்ந்து உயர்ந்து வருவது, அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தொடங்கி காய்கறிகள், மருந்து பொருட்கள் ஆகியவை வரை எல்லாவற்றிலும் பிரதிபலித்து வருகிறது.

இதனால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த தருணத்தில், 5 மாநில தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி போராட்ட களத்துக்கு வருகிறது. எப்போதும் இல்லாத சுறுசுறுப்பு அந்த கட்சிக்கு வந்துள்ளது.

அந்த கட்சி பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமை தாங்கினார். பிரியங்கா காந்தி, உம்மன்சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரன்தீப் சுர்ஜிவாலா, அஜய் மக்கான், பவன்குமார் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஷம்போல் ஏறிவரும் விலைவாசி பிரச்சினையை மக்கள் கவனத்துக்கு கொண்டு வர நேரடியாக களம் இறங்குவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

3 கட்ட போராட்டம்

இதுபற்றி அந்த கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி 3 பிரசார இயக்கங்களை (போராட்டங்களை) 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நடத்த உள்ளது.

முதல் கட்ட போராட்டம் வரும் 31-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம், பொதுமக்களும், காங்கிரசாரும் தங்கள் வீடுகள் முன்பாகவும், பொது இடங்களிலும் விலைவாசி உயர்வை எடுத்துரைக்கும் விதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, டிரம்ஸ் அடிப்பார்கள், மணி அடிப்பார்கள். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக செவி சாய்க்காத பா.ஜ.க. அரசின் கவனத்தை ஈர்க்க மக்கள் முயற்சிப்பார்கள்.

ஏப்ரல் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையில் காங்கிரஸ் கட்சி, தொண்டு அமைப்புகள், மத, சமூக அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து நாடு முழுவதும் மாவட்ட அளவில் தர்ணா போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தும்.

ஏப்ரல் 7-ந் தேதி மாநில தலைநகரங்களில் தொண்டு அமைப்புகள், மத, சமூக அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து தர்ணா போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தும்.

மோடி அரசு ஏமாற்றிவிட்டது

இந்திய நாட்டின் மக்களை மோடி அரசு வஞ்சித்து ஏமாற்றி விட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், குழாய்வழி இயற்கை எரிவாயு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலையை 5 மாநில தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 137 நாட்கள் உயர்த்தாமல் இருந்து விட்டு கடந்த ஒரு வாரமாக உயர்த்தத் தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com