காங்கிரஸ் கட்சி மிகவும் ஆபத்தானது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பா.ஜ.க. சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மிகவும் ஆபத்தானது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Published on

கவுகாத்தி,

அசாமில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கலான பின்னர் அசாமுக்கான தன்னுடைய முதல் பயணம் இதுவாகும் என குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எங்களுக்கு அது முன்னுரிமையானது. அதன் முன்னேற்றத்திற்காக எங்களை அர்ப்பணித்து இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடைய அஷ்டலட்சுமி ஆகும்.

அசாமில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இல்லை. அக்கட்சி மிகவும் ஆபத்தானது. அதன் தலைவர்கள் வெளியிடும் நச்சுத்தன்மைவாய்ந்த அறிக்கைகளில் இருந்தே அதை அறியலாம். காங்கிரஸ் கட்சி, நாட்டு பாதுகாப்புக்கு எப்போதும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அச்சமும், பாதுகாப்பின்மையும் நிலவியது. வடகிழக்கு பிராந்தியத்தை புறக்கணித்தது. ஊடுருவலை ஊக்குவித்தது.

ஆனால், பா.ஜ.க. சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி பூண்டுள்ளது. எனவே, அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்துக்கு மிகவும் முக்கியம். காங்கிரஸ் கட்சி, பிளவு ஏற்படுத்துவதிலும், வாக்கு வங்கி அரசியலிலும் ஈடுபடுகிறது. முஸ்லிம்லீக்கால் நாடு பிரிவினையை சந்தித்தது. தற்போது, காங்கிரசிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 70 ஆண்டு ஆட்சியில், பிரம்மபுத்ரா நதி மீது காங்கிரஸ் 3 பாலங்களை மட்டுமே கட்டியது. ஆனால், பா.ஜனதா அரசு 10 ஆண்டுகளில் 5 பாலங்களை கட்டி உள்ளது. பா.ஜனதா அரசின் முயற்சிகளால் அசாமில் அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அசாம் தேயிலை பிரபலமாக இருந்தது. இப்போது, செமிகண்டக்டர் சிப்புகள் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வடகிழக்கை சேர்ந்த 125 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட் டுள்ளன. புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு அரசு எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை அப்போது உலகம் பார்த்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் அந்த பதிலடியை பார்த்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சி தேச பாதுகாப்புக்கு எதுவும் செய்தது இல்லை. வெறுமனே அறிக்கைகள் விடும். ஆயுதங்கள் வாங்கும்போது ஊழலில் ஈடுபடும்.

நான் திறந்து வைத்துள்ள அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் வசதி, தேச பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறையும் ஆகும். நான் விமானத்தில் தரையிறங்கியபோது புதிய வரலாறு படைக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள அன்பை, வளர்ச்சி மூலமாக வட்டியுடன் திருப்பித்தருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com