பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை

பிரதமர் மோடிக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்தது. நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்குமாறு கூறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, அரசியல் சட்டத்தின் ஒரு பிரதியை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று அனுப்பி வைத்தது.

இந்த தகவல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், பிரதமரின் செயலகத்துக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை கொண்டு செல்லும் கூரியர் நிறுவனத்தின் ரசீதும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதாவது:-

பிரதமர் அவர்களே, அரசியல் சட்டம் விரைவில் உங்களுக்கு வந்து சேரும். நாட்டை பிளவுபடுத்தும் பணிக்கிடையே நேரம் கிடைக்கும்போது, தயவுசெய்து அதை படித்து பாருங்கள். நன்றி.

சாதி, இனம், பாலினம் வேறுபாடின்றி அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் என்று அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், பா.ஜனதா அதை புரிந்து கொள்ள மறுக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், இந்த சட்டப்பிரிவை முற்றிலுமாக மீறுகிறது.

எல்லாவகையான பாகுபாட்டில் இருந்தும் அனைவரும் பாதுகாக்கப்படுவதாக அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடு அடிப்படையில் சட்டங்களை உருவாக்கும் எந்த முயற்சியும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ராஜ்காட் பகுதியில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அரசியல் சட்டத்தின் முன்னுரையை வாசிக்கும் வீடியோ படத்தையும் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com