

ராஞ்சி,
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொய் கூறி குழப்பம் ஏற்படுத்தி நாட்டை துண்டாட காங்கிரஸ் கட்சி பார்க்கிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டினார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தனது இரட்டை நிலைப்பாட்டில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவர்கள் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பேசினார்கள். ஆனால் தற்போது பா.ஜ.க. கொண்டு வந்ததால் எதிர்க்கிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொய்கள் கூறி குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை துண்டாட காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. உண்மையிலேயே ராகுல் காந்திக்கு ஊடுருவல்காரர்கள் (இந்தியாவில் குடியேறியவர்கள்) மீது அக்கறை இருந்தால் அவர்களை தாராளமாக இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும்.
பழம்பெரும் கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
மக்களிடம் பயம், குழப்பம் போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் காங்கிரசின் பாவத்தை போக்க பா.ஜனதா முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.