'சூட்கேஸ்' எடுத்துவர மந்திரிகளுக்கு காங்கிரஸ் இலக்கு நிர்ணயம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக 'சூட்கேஸ்' எடுத்துவர மந்திரிகளுக்கு காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
'சூட்கேஸ்' எடுத்துவர மந்திரிகளுக்கு காங்கிரஸ் இலக்கு நிர்ணயம்
Published on

பெங்களூரு:-

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரிக்கு கடிதம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த அரசு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தும் என்று நாங்கள் எதிபார்த்தோம். பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காநாடக காங்கிரஸ் தலைவர்கள், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் டெல்லியில் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த மந்திரிசபையும் டெல்லியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் கூட்டம் அல்ல. வளர்ச்சி பணிகளுக்கு நிதி கேட்க வேண்டாம் என்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. 33 எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சி பணிகளுக்கு நிதி கேட்டு முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விதைப்பு பணிகள்

அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் மந்திரிகளை அழைத்து ஒவ்வொருவருக்கும் பண சூட்கேஸ் வழங்குமாறு இலக்கு நிர்ணயித்துள்ளனர். சூட்கேஸ் எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்பது குறித்து தான் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் மழை பெய்யாததால் அங்கு விதைப்பு பணிகள் நடைபெறவில்லை. பால், தயிர், நெய், மின் கட்டணம், பஸ் கட்டணம், தக்காளி உள்பட கய்கறி விலைகள் உயர்ந்துவிட்டன. சூட்கேசை நிரப்பி எடுத்து சென்று கட்சி மேலிடத்திடம் வழங்குவது, தேர்தலுக்கு தயாராவது தான் காங்கிரஸ் அரசின் நோக்கம். சமூக நலத்துறைக்கு சேர்ந்த ரூ.11 ஆயிரம் கோடி நிதியை உத்தரவாத திட்டங்களுக்கு வழங்குகிறார்கள்.

இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com