

ஒரே மாதத்தில் 3-வது முறை விலை உயர்வு
சமையல் கியாஸ் விலை முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கடந்த 4-ந்தேதி ரூ.25-ம், 15-ந்தேதி ரூ.50-ம், நேற்று மீண்டும் ரூ.25-ம் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது.இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரை ரூ.810 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா வகை
மக்களையும் பாதிக்கும் இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரியங்கா டுவிட்டர் பதிவு
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.கிரிக்கெட் ஒப்புவமைகளை பயன்படுத்திய, அந்தப் பதிவில் அவர், கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ நோக்கி நகர்கிறது. பொருளாதாரத்தின் இரு முனைகளிலும், விலை உயர்வு மற்றும் பண வீக்கம் என மோடி அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக பொதுமக்களை பந்தாடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நூதன முறையில் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை நூதன முறையில் பதிவு செய்யும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட்டும், பொதுச்செயலாளர் வினீத் புனியாவும் காலி சிலிண்டர்கள் மீது அமர்ந்து கொண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது சுப்ரியா ஸ்ரீநேட் கூறியதாவது:-
மோடி மைதானங்களுக்கு தனது பெயரை சூட்டுவதை விரும்புகிறார். ஆனால் அவர் அடித்த சதம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது என்பதுதான்.
மானியம் இல்லை...
நீங்கள் (மோடி அரசு) ஏன் மக்கள் விரோத அரசாக இருக்கிறீர்கள்? எதற்காக விலையை உயர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள்? எதற்காக நீங்கள் உற்பத்தி வரி உயர்வை திரும்பப்பெறவில்லை? இந்த அரசானது விலைகளை மட்டும் உயர்த்தவில்லை. பொய்களையும் சொல்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்ந்துள்ளதாக மோடி சொல்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், எங்கள் ஆடசிக்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 83 சதவீதம். அவர்கள் (பா.ஜ.க.) ஆட்சியில் இது 88 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சமையல் கியாஸ் மானியத்திலும் பொய் சொல்கிறார்கள். வெளிச்சந்தை விலையையும், மானிய விலையையும் ஒரே அளவுக்கு கொண்டு வந்து இருப்பதுதான் உண்மை. சந்தை விலை ரூ.794, மானிய விலை ரூ.500 என்றால், நீங்கள் ரூ.294 மானியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசு அடிக்கடி விலையை உயர்த்தி உள்ளது. டிசம்பரில் இருந்து இதுவரை ரூ.200 உயர்ந்துள்ளது. வெளிச்சந்தை விலையும், மானிய விலையும் ஒரே அளவில் இருப்பதால் மானியம் இல்லை.பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் என எல்லாவற்றிலும் சுமையை மக்கள் மீது ஏற்றத்தான் இந்த அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.