சீன அதிபருடனான சந்திப்பின் போது டோக்லாம் பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

சீன அதிபருடனான சந்திப்பின் போது டோக்லாம் பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை என்று மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சீன அதிபருடனான சந்திப்பின் போது டோக்லாம் பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
Published on

புதுடெல்லி,

ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் பிரச்சினை தொடர்பாக பேசாமல் அமைதி காத்தது ஏன் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இப்பிரச்சினையை அத்தகைய நேரத்தில் எழுப்பாமல் இருந்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன.இந்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அங்கு சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவில் சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந்தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சர்ஜேவாலா கூறியதாவது: ''டோக்லாமில் சீனா மீண்டும் ஊடுருவியுள்ளது தேசிய பாதுகாப்புக்கு நேரடி சவாலாகவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு டோக்லாமில், சீனா தனது ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை நிறுத்திவைத்துள்ள நிலையில், நமது பிரதமர் அதுகுறித்து மவுனம் சாதித்து வருகிறார்.

முன்தீர்மானங்கள் எதுவுமற்ற நிலையில் செல்லும் அவர் சீனப் பயணத்தின்போது அவர் டோக்லாம் பிரச்சினை குறித்து பேச மறந்துவிடுகிறார். இதில் இன்னொரு பிரச்சினை என்னவெனில் இந்தியாவை நம்புவதைத் தவிர டோக்லாம் பிரச்சினை குறித்து சீனா பூட்டானிடம் பேசுகிறது. இதற்கும் பிரதமர் மவுனம் சாதிப்பதுதான் தொடர்கிறது.பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவுக்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்கள் டோக்லாமின் பிரச்சினையை எடுத்துக்கொள்வதில்லை.

ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் பிரச்சினை தொடர்பாக பேசாமல் அமைதிகாத்தது ஏன்? இது மிகவும் கண்டனத்திற்குரியது இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com