வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கே அதிக லாபம்: காங்கிரஸ் விமர்சனம்

டிரம்பை பிரதமர் மோடி கட்டித்தழுவியதும், புகைப்பட ஷூட் நடத்தியதும் எந்தவிதமான பயனையும் தரவில்லை என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கே அதிக லாபம்: காங்கிரஸ் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தியா–அமெரிக்கா இடையிலான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தெளிவான விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. வெளியான குறைந்தளவு தகவல்களில் இருந்து, இனி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் 25 சதவீத அபராதம் மீண்டும் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே அசாதாரணமான ஒன்று. இதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளை பலிகொடுத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் இறக்குமதி வரியை இந்தியா குறைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி மூன்று மடங்காக உயரும்.

ஆனால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறைகளின் ஏற்றுமதி தொடர்பாக பெரும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது முன்பைவிட அதிக வரி விதிக்கப்படும்.ஆக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி கட்டித்தழுவியதும், புகைப்பட ஷூட் நடத்தியதும் எந்தவிதமான பயனையும் தரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:—

“தற்போது அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக உபரியில் உள்ளது. ஆனால் இனிமேல் அது வர்த்தக பற்றாக்குறையாக மாறும். இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிராக திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. நரவணே புத்தக விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பியதன் காரணமாக, இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குழப்பத்தில் இருந்தார். மக்களவைக்கு வரவில்லை. மாநிலங்களவைக்கு வந்தாலும், காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com