

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் மலாரி பகுதியருகே பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டு விட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.
இந்நிலையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு தொடர்பாக, அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். காங்கிரஸ் தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை மக்கள் மற்றும் அதிகாரிகளின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சோகம் மற்றும் நெருக்கடியின் இந்த நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உத்தரகண்ட் மக்களுடன் நிற்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 'பனிப்பாறை சரிவு', வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய குழப்பமான செய்திகள் மற்றும் கங்கா நதியின் கீழ்நிலை நீர்ப்பிடிப்புகளில் ஏற்படும் அபாயம் குறித்து கவலை அளிக்கிறது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.