சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நீக்க தீர்மானம் தொடர்பாக இப்போதும் ஆலோசிக்கிறோம் காங்கிரஸ்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை நீக்கும் தீர்மானம் தொடர்பாக இப்போதும் ஆலோசிக்கிறோம் என காங்கிரஸ் கூறிஉள்ளது. #Congress #MallikarjunKharge
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நீக்க தீர்மானம் தொடர்பாக இப்போதும் ஆலோசிக்கிறோம் காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என மூத்த நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பீமாராவ் லோகூர் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 4 நீதிபதிகள் சுட்டிக் காட்டிய விவகாரங்களில் தலைமை நீதிபதி அக்கறை காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதியை நீக்குவது தொடர்பான தீர்மானத்தை கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த மாதம் இறுதியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தின. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவும் மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் ஆதரவும் தேவை. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கும் பணிகளையும் காங்கிரஸ் தொடங்கியது. மாநிலங்களவையில் காங்கிரஸ் தரப்பில் 65 கையெழுத்துக்களும் பெறப்பட்டது.

சில நாட்களில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அமளியின் காரணமாக அவைகள் முடங்கி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டுவிட்டது என தகவல் வெளியாகியது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை நீக்குவது தொடர்பான தீர்மானம் தொடர்பாக இப்போதும் ஆலோசிக்கிறோம் என காங்கிரஸ் கூறிஉள்ளது. தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம், மக்களவையை பொறுத்தவரையில் உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. என்னுடைய அறிக்கையானது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிஉள்ளார்.

எதிர்க்கட்சிகள் வரிசையில் நீதிபதியை நீக்க வேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்திற்கு போதிய கையெழுத்தை பெற்றாலும், சபாநாயகர் ஏற்க வேண்டும். சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். குழுவானது நீதிபதியின் மீது தவறு உள்ளது என உறுதிசெய்தால், பின்னர் பாராளுமன்றம் தீர்மானத்தை கையில் எடுக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com