தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
Published on: 

புதுடெல்லி,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டியுள்ளார்.

பதவி நீக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பிரச்சினைகள் நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் பற்றி விவாதிக்கவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்திட்டம் வகுக்கவும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று (செப்.29 ) டெல்லியில் நடைபெற இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெரிவித்தார்.

பா.ஜ.க. சித்தாந்தம்

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்), படிவம் 6-இல் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவை தொடர்பாக கவலைகளை எழுப்பி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையர்களே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதேபோல் கேரள முன்னாள் தலைமைச் செயலரும், தன்னை தேர்தலில் போட்டியிடும்படி தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஞானேஷ் குமார் பாஜக சித்தாந்தத்தை பரப்பியதும், அக்கட்சியின் தொண்டராக மாறிவிட்டதும் தெரிகிறது. இது மிகப்பெரிய பிரச்னையாகும். நாட்டில் ஜனநாயகம் நீடிப்பது குறித்து கவலையை இது ஏற்படுத்துகிறது. ஆதலால் இந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளோம்.

ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலகிய பிறகும் அவருக்கு எதிராக எங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கவும், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது” என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி

இந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு காங்கிரஸ் கட்சியை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com