ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே டெல்லி போலீசாருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே டெல்லி போலீசாருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த பாதயாத்திரையின்போது, கடந்த ஜனவரி 30-ந்தேதி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசும்போது, நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்து காணப்படுகிறது. ஊடகங்கள் இதனை பற்றி பேசுவதே இல்லை என கூறினார். தொடர்ந்து அவர் கூறும்போது, பெண்கள் சிலர் தன்னை சந்தித்தபோது, அவர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி என்னிடம் கூறினர். அவர்களிடம், போலீசாரிடம் சென்று புகார் கொடுக்கும்படி கூறினேன். எனினும், திருமணம் நடைபெறாமல் போய் விடும் என்பதற்காக யோசிக்கிறோம் என அவர்கள் கூறினர் என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டிற்கு, சட்டம் மற்றும் ஒழுங்குக்கான சிறப்பு காவல் ஆணையாளர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான டெல்லி போலீசார் வந்துள்ளனர். இதுபற்றி சாகர் பிரீத் ஹூடா கூறும்போது, பாதயாத்திரையின்போது, பாலியல் பலாத்காரம் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்தது பற்றி ராகுல் காந்தி பேசினார். இதனை தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது.

அவரை அணுகிய பெண்களை பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக அவரிடம் பேச இருக்கிறோம். இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 15-ந்தேதியே அவரை சந்திக்க முயன்றோம். ஆனால், அது முடியாமல் போனது. இதனால், கடந்த 16-ந்தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்து விவரங்களை தரும்படி கேட்க வந்து உள்ளோம் என கூறியுள்ளார்.

டெல்லி போலீசார் வந்த தகவலை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே திரண்டனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com