பீகாரில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்; தலைவர்கள் வருகை


பீகாரில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்; தலைவர்கள் வருகை
x

ராகுல் காந்தி சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வாக்கு திருட்டு பற்றி பேசியபோது, ஹைட்ரஜன் குண்டு வெடிக்க இருக்கிறது என பேசினார்.

பாட்னா,

பீகாரின் பாட்னா நகரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சியின் முக்கிய தலைவர்கள் தலைநகருக்கு வருகை தந்துள்ளனர்.

பீகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பாட்னாவுக்கு வந்தடைந்தனர்.

கூட்டம் பற்றி சுர்ஜேவாலா கூறும்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதில் கலந்து கொள்வார் என்றார்.

ராகுல் காந்தி சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வாக்கு திருட்டு பற்றி பேசியபோது, அணுகுண்டு வெடித்து விட்டது. ஹைட்ரஜன் குண்டு அடுத்து வெடிக்க இருக்கிறது என பேசினார்.

அதனால், இந்த கூட்டத்தில் அதுபற்றி பேசப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆலோசனை மேற்கொள்வதற்கு என பல்வேறு விசயங்கள் உள்ளன. வாக்கு திருட்டுக்கு எதிராக, தேசிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் கையெழுத்து இயக்கமும் நடந்து வருகிறது. அதனால், பல அரசியல் விவகாரங்களுடன், இதனையும் நாம் விவாதிக்க வேண்டும். சட்டசபை தேர்தலும் முக்கிய விவாத பொருளாக இருக்கும் என கூறினார்.

பீகார் சட்டசபை தேர்தலுடன், அதிகரித்து வரும் குற்றங்கள், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிற விவகாரங்களும் பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story