காங்கிரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; எந்த விசாரணைக்கும் தயார் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.
காங்கிரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; எந்த விசாரணைக்கும் தயார் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
Published on

பெங்களூரு:

விரைவில் சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் தற்பாது முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்னும் 6 மாதங்களே இருப்பதால் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் ஆளுங்கட்சியும், மாநகராட்சியும் சேர்ந்து முறைகேடு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மந்திரிக்கு சொந்தமானது

பா.ஜனதா 'ஆபரேஷன் தாமரை' மூலம் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. அதே போல் தற்போது 'ஆபரேஷன் வாக்காளர்கள்' என்ற திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணி சிலுமே கல்வி, கலாசார, கிராம வளாச்சி என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது தற்போது பகிரங்கமாகியுள்ளது. வாக்காளர் பட்டியலை முறைகேடு செய்வது என்பது, ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றம் ஆகும்.

இந்த விஷயத்தில் மாநில அரசு, பெங்களூரு மாநகராட்சி மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனம் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அரசு மட்டத்தில் ஆலோசனை நடைபெறாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

தேர்தல் ஆணையம்

அதிகாரிகள் சுயவிருப்பத்தின் பேரில் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. முதல்-மந்திரி மற்றும் மூத்த மந்திரி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை திட்டமிட்டே சிலுமே நிறுவனத்திற்கு வழங்கியது ஏன்?. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல் பணிகளை தேர்தல் ஆணையம் தான் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதே குற்றம் ஆகும். பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், வாக்காளர்களின் விவரங்களை தனியார் அமைப்புக்கு வழங்கியுள்ளனர். இது நம்பிக்கை துரோகம் ஆகும். சிலுமே நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணப்பா ரவிக்குமார் இந்த முறைகேட்டின் முக்கிய நபராக இருப்பது மேல்நோட்டமாக தெரிகிறது.

விசாரிக்காதது ஏன்?

இதன் பின்னணியில் அரசின் உயர் பதவியில் உள்ளவர்களின் கைவண்ணம் இருக்கிறது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும். ஒரு தனியார் நிறுவனம் முன்வந்து, வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணிகளை இலவசமாக மேற்கொள்வதாக கூறியதால் அந்த நிறுவனத்திற்கு இந்த பணியை ஒப்படைத்தோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகளை அந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். பகிரங்கமாக விளம்பரம் செய்யாமல், டெண்டருக்கு அழைக்காமல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த பணிகளை எப்படி வழங்க முடியும்?. அனுமதி வழங்கும்போது அந்த நிறுவனத்தின் பின்னணி குறித்து விசாரிக்காதது ஏன்?.

விசாரணை நடைபெற வேண்டும்

இலவச சேவையின் நோக்கம் என்ன என்பதையும் பரிசீலனை செய்திருக்க வேண்டும். அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி மூலம் தேர்தல் அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இந்த தகவல் பகிரங்கமானதும், பெங்களூரு மாநகராட்சி நேற்று முன்தினம், அந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம் பெங்களூரு மாநகராட்சியில் மட்டும் நடந்துள்ளது. வரும் நாட்களில் இதை பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற வேண்டும். 40 சதவீத கமிஷன், உள்கட்சி மோதல் போன்றவற்றில் மூழ்கியுள்ள பா.ஜனதா அரசு, மீண்டும் மக்களின் ஆதரவை பெற்று வெற்றிபெறும் நம்பிக்கையை இழந்துவிட்டது.

வெற்றி பெற சதி திட்டம்

அதனால் குறுக்கு வழியில் வெற்றி பெற சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதில் முதல்-மந்திரி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றுக்கு தொடர்பு உள்ளது. இத்தகைய முறைகேடுகளால் தேர்தல் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் நிலை ஏற்படும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மத்திய தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை கவனத்தில் வைத்து இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு நடத்தப்பட்டுள்ளது மல்நோட்டமாக தெரிகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்க இருக்கிறோம்.

ராஜினாமா செய்ய வேண்டும்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை உடனே கைது செய்ய வேண்டும். அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவேளை முதல்-மந்திரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ள வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் திவால் ஆகிவிட்டது

வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் என் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

என் மீதான இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அரசை குறை கூறுவதில் காங்கிரஸ் திவால் ஆகிவிட்டது. அதாவது எனக்கு எதிராகவோ அல்லது எனது அரசுக்கு எதிராகவோ குறை கூற அவர்களிடம் எந்த விஷயமும் இல்லை.

அதனால் எந்த ஆதாரமும் இன்றி என் மீது குற்றம்சாட்டுகிறார்கள். இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த நான் தயாராக உள்ளேன். வாக்காளர் பட்டியல் விவகாரம் என்பது தேர்தல் ஆணையம், பெங்களூரு மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இடையேயானது. அந்த தனியார் தொண்டு நிறுவனம் தவறு செய்திருந்தால் அதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த விசாரணைக்கும் தயார்

வாக்காளர்களின் தகவல்கள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஆவணங்கள் ரீதியாக ஒன்றும் இல்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யோசனைகள் இல்லாமல் காங்கிரஸ் திவாலாகி இருப்பதை கண்டு எனக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. எந்த விசாரணைக்கு நான் தயார். குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறட்டும். உண்மைகள் வெளியே வரட்டும். விசாரணை நடத்தாமல் நாங்கள் தப்பி ஓடிவிடவில்லை. இந்த முறைகேடு குறித்து புகார் அளிக்கும்படி பெங்களூரு மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

முதல்-மந்திரி, மந்திரி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, ரிஸ்வான் ஹர்ஷத் மற்றும் நிர்வாகிகள் நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து புகார் கொடுத்தனர்.

அதில் வாக்காளர் பட்டியல் முறகேட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் மற்றும் சிலுமே நிறுவன நிர்வாகிகளுக்கு தாடர்பு உள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு சய்து விசாரணை நடத்த வண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com