

புதுடெல்லி,
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் அமைதியை வலியுறுத்தியும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேசிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி இன்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்தந்த மாநிலங்களில் மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி ராஜ் காட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கியதாக பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது. காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. சார்பில் 12-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.