பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ ( AICTE) கடிதம் அனுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

உக்ரைன்-ரஷியா போரினால் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை, உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஏஐசிடிஇ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், உக்ரைனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படித்து வந்த சுமார் 20,000 இந்திய மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். உக்ரைனில் அந்த மாணவர்கள் எந்த தொழில்நுட்ப பாடப்பிரிவு மற்றும் ஆண்டில் கல்வி பயின்றார்களோ, அதே மட்டத்தில் அவர்களை சேர்த்துக்கொள்ளலாம். காலியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப படிப்பைத் தொடர அவர்களை அனுமதிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com