ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை

ஒரே நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை
Published on

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதன் மூலம் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அத்தகைய பெயர்களை நீக்கி, தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்தால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் பெயர்களை எளிதில் அடையாளம் காணலாம் என்று கருதியது. அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை திரட்டியது.

ஆனால் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் எண் சேகரிக்க சட்ட திருத்தம் அவசியம் என்று கூறியது.

தேர்தல் கமிஷன் யோசனை

அதனால், வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க வாக்காளர் பதிவு அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் ஒரு யோசனையை முன்வைத்தது.

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இந்த யோசனையின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் வருமாறு:-

பரிசீலனை

வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருப்பதை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க தேர்தல் கமிஷன் விரும்புகிறது. இதற்கு சட்ட திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இந்த யோசனை மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆதாரை இணைத்தாலும், வாக்காளர் பட்டியல் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். அதை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com