இந்தியாவில் வன்முறையைத் தூண்ட சதி: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிரான குழுக்களும் சில அரசியல்வாதிகளும் இணைந்து இளைஞர்களைத் தூண்டி, வீதிகளில் வன்முறையைப் பரப்பத் திட்டமிட்டனர்.
கிரண் ரிஜிஜு
Published on: 

இந்தியாவில் இளைஞர்களைத் தூண்டி வீதிகளில் வன்முறையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவுக்கு எதிரான குழுக்களும், சில அரசியல்வாதிகளும் சதி செய்ததாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் மூலமாக மட்டுமே சாத்தியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையும், பிரான்சில் நடந்த கலவரம், தீவைப்பு, கொள்ளைச் சம்பவங்களையும் போன்ற ஒரு சதித் திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான குழுக்களும் சில அரசியல்வாதிகளும் இணைந்து இளைஞர்களைத் தூண்டி, வீதிகளில் வன்முறையைப் பரப்பத் திட்டமிட்டனர். ஆனால், இந்த ஆபத்தான சதியைத் தீட்டியவர்கள் இந்தியா வங்கதேசமும் அல்ல, பிரான்சும் அல்ல என்பதை மறந்துவிட்டனர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிச்சயமாகச் சாத்தியம்தான். ஆனால், அது தேர்தல் மூலமாக மட்டுமே நடக்க வேண்டும்; ஜார்ஜ் சோரோஸ் மூலமாக அல்ல” என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வரக்கூடிய நிலையில், கிரண் ரிஜிஜு இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றும், தாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல், அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவும் வங்கதேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சியைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகளை முன்வைத்து, எதிர்க்கட்சியினரும் போராட்டக்காரர்களும் வீதிப் போராட்டங்கள் மூலம் அரசை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com