

புதுடெல்லி,
புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் பகுதியில் ஜே.ஜே. காலனி என்ற இடத்தில் கள்ள சாராயம் விற்கப்படுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் ராமகிருஷ்ணன் என்பவர் அந்த பகுதிக்கு ரோந்து சென்றுள்ளார்.
வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு இருந்த 2 பேர் அவரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து அந்த பகுதியில் குடியிருப்போர் பலர் ஒன்றாக கூடினர். அவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வாக்குவாதம் முற்றி அவரை தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர்.
இதனால் ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டபடியே அங்கிருந்து கான்ஸ்டபிள் தப்பியோடினார். தொடர்ந்து கும்பல் அவரை விரட்டியபடியே சென்றுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.