

இந்திய அரசியலமைப்பை அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாப்போம் என்றும், ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1949-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. இதனை நினைவுகூரும் வகையில் அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல. அது நாட்டின் ஆன்மா. ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் கேடயம். ஒவ்வொரு குரலுக்கும் வலிமை அளிப்பதுடன், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்கும் அரணாகவும் திகழ்கிறது.
இதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அநீதிக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். அரசியலமைப்பை அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாப்போம் என்றும், ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் அரசியலமைப்பு தினத்தில் மீண்டும் உறுதியேற்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.