

புதுடெல்லி,
தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில், தமிழக அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று (அதாவது 24-ந்தேதி) மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி உத்தர விட்டு இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அழகர்சாமி என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் அதே தீபத்தில் இருந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். கடந்த 20-ந்தேதியிட்ட உத்தரவின்படி தீபத்தூணில் விளக்கேற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கோவில் நிர்வாகத்துக்கும், மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத், ராம ரவிக்குமார் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராம ரவிக்குமார் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், 'கார்த்திகை மாதம் இன்னும் முடியவில்லை.
எனவே, ஏற்கனவே விதிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு, நடப்பு மாதத்தில் தீபத்தூணில் விளக்கை ஏற்றுவதற்கு ஒரு மாற்றுத்தேதியை நிர்ணயித்து, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து 2 ஆண்டுகள் கோர்ட்டு உத்தரவுகள் பின்பற்றப்ப டாததை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு அவசியமென கருதினால், ஒரு சுதந்திரமான நீதிமன்ற ஆணையர் மற்றும் சி.ஆர்.பி.எப். படை உதவியுடன், தலைமைச் செயலாளர் ஏற்பாடுகளை பார்வையிட உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு செய்தவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என வக்கீல் ஜி.பாலாஜி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் அர்விந்தகுமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு, இடையீட்டு மனுவுடன், இந்த மனுவையும் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது. இதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.