அவமதிப்பு வழக்கில் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷண் மறுப்பு - தண்டனையை ஏற்பதாக அறிவிப்பு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.
அவமதிப்பு வழக்கில் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷண் மறுப்பு - தண்டனையை ஏற்பதாக அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் பைக் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் சமூக செயல்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே தலைமை நீதிபதி போப்டே குறித்து வெளியிட்ட கருத்துக்கு பூஷண் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னாள் நீதிபதிகள் குறித்த (கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் நாட்டின் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர்) கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இந்த அவமதிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்தது.

அவருக்கான தண்டனை குறித்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு மீண்டும் விசாரித்தது. இதில் விசாரணை துவங்கியதும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.

பிரசாந்த் பூஷண் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கோர்ட்டு அவமதிப்புக்கான தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தண்டனையை அறிவிப்பதை ஒத்திப்போடுவது தொடர்பான மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, தான் விரைவில் பணி ஓய்வு பெறுவதாகவும் அதற்கு முன்பு இந்த வழக்கில் தண்டனை குறித்த முடிவு இதே அமர்வில் எடுக்கப்பட்டு அதன் பிறகு மறுஆய்வு மனு மீதான விசாரணை நடக்கலாம் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த காணொலி அமர்வில் பிரசாந்த் பூஷண் வாசித்த அறிக்கையில் கூறியதாவது:-

நான் கூறியது மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீதான கோர்ட்டு அவமதிப்புக்கான மனுவின் நகலை எனக்கு கோர்ட்டு வழங்காதது எனக்கு பெருத்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக மாண்புகளை காப்பதற்கு வெளிப்படையான கருத்துகள் மிகவும் அவசியமாகும்.

என்னுடைய டுவிட்டர் பதிவுகள் ஜனநாயக நாட்டில் ஆற்றும் உச்சக்கட்ட கடமை என்ற என்னுடைய நிலைப்பாட்டை நிறைவேற்றும் சிறிய முயற்சியாகும். எனவே நான் கருணை எதுவும் கோரவில்லை. என் மீது பெருந்தன்மையை காட்டுமாறும் கேட்கவில்லை. இந்த கோர்ட்டு விதிக்கும் தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பிரசாந்த் பூஷண் வாசித்த அறிக்கையின் தொனி, தன்மை மற்றும் உள்ளடக்கம் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவுகளுக்கு மன்னிப்பு கோராவிட்டால் அவருக்கு தண்டனை வழங்கக்கூடாது என்ற உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு தெரிவித்தனர்.

உடனே அவர், பிரசாந்த் பூஷண் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அத்துடன், பிரசாந்த் பூஷணிடம் உங்களுக்கு சிறிது அவகாசம் வழங்கப்படுகிறது. உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பிரசாந்த் பூஷண், நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. இப்படி அவகாசம் வழங்குவதால் எந்த பயனும் இருக்காது என்றார்.

எனினும் நீதிபதிகள், நாங்கள் நேரடியாக தண்டனையை அறிவிக்க விரும்பவில்லை. உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறி வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com