

புதுடெல்லி
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க கெஜ்ரிவாலுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுவர்ண காந்த சர்மாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 21 பேர் மீது நீதிபதி சுவர்ண காந்த சர்மா, தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், இந்த வழக்கில் இருந்து கெஜ்ரிவால் உள்பட 21 பேரையும் விசாரணை கோர்ட்டு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி விடுவித்தது. அதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் நவீன் சாவ்லா, அருண் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவால் உள்பட 21 பேர் பதில் மனு தாக்கல் செய்ய இறுதிவாய்ப்பாக 3 வாரங்கள் கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தாக்கல் செய்யாவிட்டால், பதில் மனு தாக்கல் செய்யும் உரிமையை பறித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.
எனினும், சில ஆவணங்கள் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என ஆம் ஆத்மி தலைவர்கள் கூறினர். ஆனால், அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டு விட்டன. 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு என நீதிபதி அமர்வு தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை, ஜனவரி 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.