

சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கமகளூருவில் மழை
சிக்கமகளூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதாவது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் ஓடும் துங்கபத்ரா உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சிக்கமகளூரு மாவட்டத்திற்கு வருகிற 7-ந் தேதி வரை 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற 7-ந் தேதி வரை மாவட்டத்தில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
ஆற்றில் குளிக்க தடை
மேலும் மழை பெய்யும் சமயத்தில் மரத்தடியில் நிற்க கூடாது என்றும் எச்சரித்து இருக்கிறது. இதற்கிடையே சிருங்கேரியில் நேற்றும் கனமழை பெய்தது. இதனால் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக சிருங்கேரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் ஆற்றில் குளிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை பாதிப்புகளை எதிர் கொள்ள பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படை வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், அதிக கனமழை பெய்யும் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனே அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.