

திருவனந்தபுரம்,
கேரளாவில் பூஞ்ஜார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பி.சி. ஜார்ஜ். கேரள ஜனபக்ஷம் என்ற கட்சியின் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார். சுயேச்சை எம்.எல்.ஏ.வான இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில், திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி தனது ஆடம்பர காரில் சென்ற அவர் பள்ளியக்கரை பகுதியில், சுங்க சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரது காரில் எம்.எல்.ஏ. என்ற பெயர் பலகை இருந்தபொழுதும், அதிகளவில் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்த அந்த சுங்க சாவடியில் இருந்த ஊழியர்கள் அவரை கடந்து செல்ல அனுமதி அளிக்கவில்லை.
சாலை வரி கட்டும்படி அங்கிருந்த ஊழியர்கள் கூறியதற்காக ஆத்திரம் அடைந்து சுங்க சாவடி தடுப்புகளை எம்.எல்.ஏ. உடைத்துள்ளார் என போலீசார் கூறினர்.
இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டில், டி.வி. நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று பேசும்போது, கேரள தியேட்டர்களில் நடிகர் விஜய் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கேரளாவில் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் பிஷப்பாக இருந்த ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் மீது கடந்த 2018ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.
அந்த புகாரில், தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரித்தனர்.
அவரிடம் பல்வேறு சுற்று விசாரணை நடத்திய பின்னர் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் கேரள போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு மூலக்கலை கைது செய்தது. அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ. ஜார்ஜ், கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி உள்ளார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இதுபோன்ற பல்வேறு சர்ச்சை பேச்சுகளில் கேரள எம்.எல்.ஏ. ஜார்ஜ் சிக்கிய நிலையில், கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
கேரள மகளிர் ஆணையமும் அவருக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கையில் இறங்கியது. இதன்படி, அந்த ஆணையத்தின் தலைவரான எம்.சி. ஜோசபின் இதுபற்றி கேரள சட்டசபையின் சபாநாயகரிடம் புகார் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக எம்.எல்.ஏ. அவதூறாக பேசியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரை சிறப்புரிமை மற்றும் நெறிமுறைகள் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார். அதனை ஆய்வு செய்து, ஜார்ஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் ஜார்ஜ் மீது சபாநாயகர் சட்டசபையில் கண்டன அறிவிப்பு வெளியிட்டார்.
ஜார்ஜ் இதனை ஏற்று கொண்டபோதிலும், கன்னியாஸ்திரிக்கு எதிராக எதுவும் நான் கூறவில்லை என கூறியுள்ளார். கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து கன்னியாஸ்திரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன்பின் அவர் கன்னியாஸ்திரி கிடையாது என ஜார்ஜ் கூறியுள்ளார்.
ஆனால், கன்னியாஸ்திரியோ இல்லையோ, பெண்ணுக்கு எதிரான அவரது இதுபோன்ற பேச்சுகள் நாகரீகமற்றது என குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.