சர்ச்சை வீடியோ விவகாரம்; பனோலிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது கொல்கத்தா ஐகோர்ட்டு

கல்வி நோக்கத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என அணுகினால் அதுபற்றி கோர்ட்டு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்ச்சை வீடியோ விவகாரம்; பனோலிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது கொல்கத்தா ஐகோர்ட்டு
Published on

கொல்கத்தா,

அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்தது சர்ச்சையானது.

இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது. அவர் வெளியிட்ட வீடியோ, மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்ற வகையிலும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்தது. அவரை விமர்சித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டனர். சிலர் அவரை அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர் மன்னிப்பும் கோரினார்.

எனினும், கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்து போன அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். அவருக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது.

பனோலியை கைது செய்ய வலியுறுத்தி #ArrestSharmishta என்ற ஹேஷ் டேக்கும் வைரலானது. இந்த சூழலில் அவரை குருகிராமில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து, கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிராக, பா.ஜ.க. தலைவர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பனோலி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த சூழலில், அவருடைய இடைக்கால ஜாமீன் பற்றி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது பனோலிக்கு, நீதிபதி ராஜா பாசு சவுத்ரி தலைமையிலான அமர்வு, ரூ.10 ஆயிரம் பிணை தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். பனோலிக்கு எதிரான புகாரில் எந்தவித குற்றத்திற்கான விசயங்களும் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.

வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறியதுடன், அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டது. கல்வி நோக்கத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என அணுகினால் அதுபற்றி கோர்ட்டு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பனோலிக்கு மிரட்டல்கள் வந்துள்ள சூழலில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com