சபரிமலை விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது - கேரள போலீசார் நடவடிக்கை

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது - கேரள போலீசார் நடவடிக்கை
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது.

அப்போது அய்யப்பனை தரிசிப்பதற்காக சென்றிருந்த தடை செய்யப்பட்ட வயது பெண்களை, நிலக்கல், பம்பை, சன்னிதானம் போன்ற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பி சென்றனர்.

இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சபரிமலை தந்திரிகளின் தாழமோன் குடும்பத்தை சேர்ந்தவரும், அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை தடுப்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதாவது, சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயது பெண்கள் யாராவது நுழைந்தால், கோவிலை மூடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் சிலர் அங்கே ரத்தம் சிந்துவார்கள் என தெரிவித்தார்.

கத்தியால் தங்களை தாங்களே காயப்படுத்தி ரத்தம் சிந்துவதற்கு அய்யப்ப பக்தர்கள் 20 பேர் தயாராக இருப்பதாக கூறிய ராகுல் ஈஸ்வர், இவ்வாறு கோவிலில் ரத்தம் சிந்தப்படுவதால் பரிகார பூஜைகளுக்காக 3 நாட்கள் மூடப்படும் என்றும் தெரிவித்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சபரிமலையில் பெண்களை தடுப்பதற்காக அய்யப்ப பக்தர்கள் சதி திட்டம் தீட்டியுள்ளது ராகுல் ஈஸ்வரின் கருத்து மூலம் தெளிவாகி இருப்பதாக கூறிய மாநில தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், இந்த சதியை போலீசார் முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொச்சியில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக சபரிமலையில் போராட்டம் நடத்தியதற்காக கடந்த 17-ந் தேதியும் இவர் கைது செய்யப்பட்டு இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ஈஸ்வருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com