

திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் தொண்டராக இருந்தவர் புன்னோல் ஹரிதாசன். இவரது கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் நிஜில் தாஸ் (வயது 38).
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டரான இவரை போலீசார் பல இடங்களில் தேடி வந்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கேரளாவின் வடக்கே பினராயி என்ற இடத்தில் பாண்டியாலமுக்கு என்ற பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிஜிலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வளைகுடா நாட்டில் வேலை செய்து வரும் பிரசாந்த் என்பவரின் வீடு அது. அவரது மனைவி ரேஷ்மா, மேனிலை பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் நிஜிலின் தோழி ஆவார். தனது வீட்டில் கொலை குற்றவாளியை தங்க வைத்ததற்காக ரேஷ்மாவும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவரது கணவர் பிரசாந்த் வெளிநாட்டுக்கு சென்றதும், அந்தலூர்காவு பகுதியருகே உள்ள மற்றொரு வீட்டில் ரேஷ்மா வசித்து வந்துள்ளார். பினராயி பகுதியில் உள்ள வீடு பூட்டியே கிடந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் ஹரிதாசன் கொல்லப்பட்ட பின்னர் நிஜில் தப்பியோடி விட்டார். பல இடங்களில் தலைமறைவாக இருந்து வந்த அவர், ரேஷ்மாவை தொடர்பு கொண்டு தங்குவதற்கு நிரந்தர இடம் வேண்டும் என கேட்டுள்ளார்.
கடந்த 17ந்தேதியில் இருந்து பினராயி பகுதியில் அவர் தங்கியிருக்க கூடும் என போலீசார் சந்தேக அடிப்படையில் தெரிவித்து உள்ளனர். இந்த வீடானது, முதல்-மந்திரி பினராயி விஜயன் தங்கியுள்ள வீட்டின் அருகே அமைந்துள்ளது. இது, சி.பி.ஐ.(எம்) கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நிஜில் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். 2 வெடிகுண்டுகளும் வீசப்பட்டு உள்ளன.