சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அடித்துக்கொன்ற கும்பல்; அதிர்ச்சி சம்பவம்

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அடித்துக்கொன்ற கும்பல்; அதிர்ச்சி சம்பவம்
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டம் குட்ரா கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அசோக் சில மாதங்களுக்குமுன் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால், அசோக் குமார் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலையில் அதேபகுதியை சேர்ந்த சன்னி விவாடி என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாகவும் பழங்குடியினர் கருதியுள்ளனர்.

இதனிடையே, விவாடியை பழங்குடியினத்தை சேர்ந்த கும்பல் இன்று கடத்தியது. குட்ரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் விவாடியை அடைத்துவைத்து அவரை கடுமையாக தாக்கினர்.

இந்த கடத்தல் குறித்து தகவல் அறிந்த ஷாபூர் பகுதி இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர கவுதம், சப் - இன்ஸ்பெக்டர் பாரதியா தலைமையிலான போலீசார் குட்ரா கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

ஆனால், போலீசார் வருவதற்குள் விவாடியை அந்த கும்பல் அடித்துக்கொலை செய்தது. அவரது உடல் அங்குள்ள வீட்டில் இருந்த நிலையில் வீட்டின் கதவை திறக்க போலீசார் முயன்றனர். அப்போது, போலீசாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.

கற்கள், கட்டைகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் உள்பட போலீசார் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்தீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சில போலீசாருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

கும்பல் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப், குட்ரா கிராமத்தை சேர்ந்த சன்னி விவாடி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிலர் தலைமறைவான நிலையில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com