

புதுடெல்லி,
ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இந்த திருட்டு ஆவணங்களை ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டது, அரசாங்க ரகசியங்கள் சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.
இந்த தகவல் அடிப்படையில், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், மத்திய அரசு தரப்பிலும் அட்டார்னி ஜெனரல் மீது அதிருப்தி உருவானதாக தெரிகிறது.
இந்நிலையில், பாதிப்பை சரிசெய்யும் விதமாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அவர் கூறியதாவது:-
ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டதுபோல் எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது.
சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுடன் 3 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அவை ரபேல் தொடர்பான அசல் ஆவணங்களின் நகல்கள் ஆகும். நகல்களை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்ற பொருளில்தான் நான் கூறினேன். எனவே, ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.