

ஐதராபாத்,
தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஞாயிற்று கிழமை நிலவரப்படி) 1,280 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 2,261 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதேபோன்று 15 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,369 ஆக உயர்ந்து உள்ளது. 5.78 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 21,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,484 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர் கண்டு கொள்ளாமல் கைவிடப்படும் சூழலும் காணப்படுகிறது. போதிய வசதியின்மை, தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ இடம் கிடைக்காத நிலை ஆகியவற்றால் உறவினர்கள் இந்த உடல்களை விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இதுபோன்ற உடல்களுக்கு தன்னார்வலர்கள் குழு ஒன்று தங்களது சொந்த செலவில் இறுதி சடங்குகளை செய்து அனைவரையும் கவனம் ஈர்க்க செய்துள்ளது.
இதுபற்றி அந்த அமைப்பின் குழு உறுப்பினர் ஜாகித் கூறும்பொழுது, கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களுக்கு கண்ணியமுடன்
இறுதி சடங்குகளை நடத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
குடும்பத்தினரால் கைவிடப்படும் உடல்களை நாங்கள் எடுத்து வந்து இறுதி சடங்குகளை மேற்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.