

தர்மசாலா,
இமாசலபிரதேசத்தின் பாலம்பூர், தனியார் நர்சிங் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 பயிற்சி நர்சுகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 30 நர்சுகளுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மாணவிகள் அனைவரும், பிரத்தியேக வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பு மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மற்றும் விடுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
நேற்றுவரை அந்த மாவட்டத்தில் 8 ஆயிரத்து 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்துவிட்டனர்.