

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில் இதில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபை மைய மண்டபம் மூடப்பட்டு சபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து திறந்தவெளியில் மரத்தின் அடியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தநிலையில் சட்டசபை காவலர்கள் 2 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் முதல் சட்டசபை வளாகம் மூடப்பட்டது. மீண்டும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டசபை திறக்கப்படும் என சட்டசபை செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபைக் காவலர்களுடன் பணியாற்றி வந்த மற்ற அரசு ஊழியர்கள், அலுவலர்கள் கலக்கமடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.